சென்னை தாம்பரம் அருகே காதலனுடன் சேர்ந்து பெற்ற தாயை மகளே தீவைத்து கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம் சானிடோரியத்தை சேர்ந்த பெண்மணி பூபதி (60). இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு (ஜன.7) பட்ட பகலில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இதனையடுத்து வீட்டில் தானாக தீப்பற்றி எரிந்ததாக இவரது இளைய மகள் நந்தினி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் தீயில் சிக்கி படுகாயமடைந்த பூபதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த குரோம்பேட்டை போலீசார், பூபதி உடலில் தானாக தீப்பற்ற என்ன காரணம் என்ற சந்தேகம் ஏற்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், நந்தினி மீது சந்தேகம் இருந்ததால் போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர். அப்போது நந்தினி ஏற்கனவே திருமணமான நிலையில், திருநீர்மலையை சேர்ந்த முருகன் என்பவருடன் தகாத உறவில் இருந்துள்ளார். இந்த விவகாரம் நந்தினியின் தாய் பூபதிக்கு தெரியவர, இது குறித்து நந்தினியை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த நந்தினி அவரது காதலன் முருகனுடன் சேர்ந்து, பூபதி தூங்கும்போது அவரது உடலில் தீ வைத்து எரித்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து நந்தினி மற்றும் அவரது காதலன் முருகன் இருவரையும் னைது செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். தவறான உறவிற்காக தன் தாயையே மகள் எரித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.