தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்குமிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இந்த சந்திப்பு நடந்தது.
வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் அரசாங்க அதிகாரிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்றை அமைப்பதென முடிவெடுக்கப்பட்டிருந்தது. அந்த குழுவை அடுத்த வாரமளவில் உருவாக்குவதென முடிவெடுக்கப்பட்டது.
கம்பெரலிய நிதி, அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
இதன்போது, இலங்கை நிர்வாக சேவை போட்டிப்பரீட்சையில் அதிக தமிழர்கள் சித்தியடைந்ததை காரணம் காட்டி, அந்த பரீட்சை மோசடியாக நடத்தப்பட்டதாக கல்வியமைச்சு அறிவித்த விவகாரத்தை நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் குறிப்பிட்டார்.
பரீட்சையில் மோசடிகள் இடம்பெறவில்லையென்பதை பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய எம்.ஏ.சுமந்திரன், இந்த விடயத்தில் நீதியான முடிவு எடுக்கப்படாவிட்டால், தான் நீதிமன்றத்தை நாடப்போவதாக குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் உடன் கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி தனது செயலாளரிற்கு பிரதமர் உத்தரவிட்டார்.