பெற்ற தாயை தேடும் மகன்: 40 வருட பாசப்போராட்டம்!

டென்மார்க்கை சேர்ந்த டேவிட் கிலெண்டால் என்பவர் தன்னை பெற்றெடுத்த தாயை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் 40 வருடங்கள் கழித்து தமிழகம் வந்துள்ளார்.

டேவிட் கிலெண்டால் நீல்சனின் உண்மையான பெயர் சாந்தகுமார். சென்னை வண்ணாரப்பேட்டையில் ஜன 25 ஆம் திகதி 1978ல ஆம் ஆண்டு தனலட்சுமி-கலியப்பெருமாள் தம்பதிக்குப் பிறந்தவர்.

இவருக்கு ஒரு சகோதரரும் உண்டு. குடும்பச் சூழலின் காரணமாக இந்த இருவரையும் பெற்றோர் மெட்ராஸ் கிறிஸ்டைன் குழந்தைகள் காப்பகத்தில் 1978ல் விட்டுவிட்டனர்.

இதில் கைக்குழந்தையாக இருந்த டேவிட் 1979ஆம் ஆண்டு வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு தம்பதியால் தத்தெடுக்கப்பட்டுள்ளார்.

2013ஆம் ஆண்டு சென்னை வந்த அவர், தனக்கு ஒரு சகோதரர் இருந்தார் என்றும், அவர் பெயர் மானுவேல் ராஜன் என்பதையும் கண்டுபிடித்து, அவரையும் தேடி கண்டுபிடித்தார். 2013ல் இருவரும் சந்தித்துவிட, இருவருமாக சேர்ந்து தமது பெற்றோரைத் தேடி வருகின்றனர்.

குழந்தைக் கடத்தலைத் தடுப்பதற்காக போராடிவரும் அருண் தோஹ்லே மற்றும் அஞ்சலி பவார் ஆகியோரின் உதவி கிடைக்க, இவர்களைப் பற்றிய செய்தி வெளியிடப்பட்டது.

இந்த செய்தியைப் படித்த காப்பகம் நடத்திவரும் ஒரு கிறித்தவ பெண், தனலட்சுமியின் புகைப்படம் கிடைக்க உதவி செய்திருக்கிறார். கடந்த நாற்பது ஆண்டுகளில் தன்னைப் பெற்ற தாயை முதன்முறையாக பார்ப்பதாக வியந்து நெகிழ்ந்த டேவிட், இந்தப் புகைப்படத்தை போஸ்டரில் சேர்த்து வண்ணாரப்பேட்டை பகுதியில் தேடத் தொடங்கியபோது, கோவிந்தராஜன் என்பவர் தனலட்சுமியைத் தெரியும் என்று கூறியிருக்கிறார்.

அவர் எண்ணூருக்கு சென்றுவிட்டதாகவும் தகவல் தந்திருக்கிறார். எண்ணூரிலும் இப்போது தங்களது தாயை தேடி வருகின்றனர் தனலட்சுமியின் இரண்டு மகன்கள்.