வாலிபர் பிணமாக மீட்பு: நண்பர்களே கொலை செய்தது அம்பலம்!

காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த இளைஞர், உடல் இன்று கணுவாய் தடுப்பணை அருகே மீட்கப்பட்டது.

கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள பூக்கடையில் வேலை செய்து வந்தவர் ராஜா(25).  கடந்த 3ம் தேதி வேலைக்குச் சென்ற இவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள், துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து இது குறித்து ழக்கு பதிவு செய்த துடியலூர் போலீசார், ராஜாவின் செல்போன் உரையாடல்களை வைத்து  விசாரணை செய்தனர். அப்போது தான் ராஜா கடத்தப்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக ராஜா நண்பர்களான காளி மற்றும் தர்மன் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் ராஜாவை மது போதையில் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, குத்தி கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இந்தக் கொலையில் விஜயகுமார், சபரி, நல்லேந்திரன் ஆகிய மூன்று பேருக்கும் தொடர்பு உள்ளதாகவும்  விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இன்று மாலை 5.50 மணிக்கு 3 ஜீப்களில் தடயவியல் நிபுணர்களுடன் சென்ற போலீசார், கணுவாய் தடுப்பணை பள்ளம் அருகே ராஜா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் மற்ற குற்றவாளிகளை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் துடியலூர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதில் விஜயகுமார் மற்றும் நல்லேந்திரன் மீது ஏற்கனவே கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.