தனிஒருவன் ஹிட்மேன்: போராடி தோற்ற இந்தியா!

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியடைந்தது.

இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹேண்ட்கோம்ப் 73 ரன்களும், கவாஜா 59 ரன்களும், மார்ஷ் 54 ரன்களும் ஸ்டோய்ஸ் 47 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் புவனேஷ்வர், குல்தீப் தலா 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தவான் 0, கோலி 3, ராயுடு 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். 4 ரன்கள் எடுப்பதற்குள் இந்திய அணி 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இதனைத் தொடர்ந்து 4வது விக்கெட்டுக்கு தொடக்க வீரர் ரோகித்துடன் ஜோடி சேர்ந்த, முன்னாள் கேப்டன் தோனி அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டார். தோனி ஒருபுறம் நிதானமாக ஆட மறுமுனையில் ரோகித் அவ்வப்போது பவுண்டரி, சிக்சர் அடித்து ரன்விகிதத்தை உயர்த்தினார்.

அணியின் ஸ்கோர் 141 ரன்களை எட்டியபோது அரைசதம் அடித்திருந்த தோனி 51 ரன்களில் ஆட்டமிழந்தார். தோனி ரோகித் ஜோடி 4 வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தது. தோனி, கடைசியாக டிசம்பர் 10, 2017-ல் தரம்சலாவில், இலங்கைக்கு எதிராக அரைசதம் அடித்து 65 ரன்கள் சேர்த்தார். அதன்பின் 23 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் இன்றைய அரைசதம் அடித்துள்ளார். இந்த 23 போட்டிகளில் 8 போட்டிகளில் தோனி களமிறங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 12 ரன்களிலும், ஜடேஜா 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தனி ஒருவனாக போராடிய தொடக்க வீரர் ரோகித் 129 பந்துகளில் 10 பவுண்டரி 6 சிக்சருடன் 133 ரன்கள் எடுத்து 7 வது விக்கெட்டாக வெளியேறினார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய புவனேஷ்வர் 23 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் ரிச்சர்டுசன் விக்கெட்டுகளும், பெஹிரின்டப், ஸ்டோய்ஸ் தலா  2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி 1 – 0 என்ற முன்னிலையில் உள்ளது. 2 வது ஒருநாள் போட்டி வரும் ஜன 15 அன்று அடிலெய்டில் நடைபெறுகிறது.