அமெரிக்க குடியுரிமையை கைவிடுகிறார் கோத்தா

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவதற்கான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார் என்று வெளியாகிய தகவல்களை உறுதிப்படுத்த அவரது பேச்சாளர் மறுத்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச அண்மையில் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கான ஆவணங்களை கையளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

எனினும், இந்த ஊகங்களை நிராகரித்துள்ள கோத்தாபய ராஜபக்சவின் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை பற்றி பகிரங்கப்படுத்த முடியாது என்று கூறியுள்ளார்.

இது தனிப்பட்ட விடயம் என்றும், அதனை பகிரங்கப்படுத்த முடியாது எனவும், கூறிய அவர், இந்தச் செய்திகள் தொடர்பாக கருத்து வெளியிடவும் மறுத்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச சமர்ப்பித்துள்ள குடியுரிமை துறப்பு ஆவணங்கள் தொடர்பாக, தகவல்களை அனுப்புமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் அமெரிக்காவில் இருந்து கோரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அத்தகைய எந்த ஆவணமும் கிடைத்ததா என்பது பற்றி அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்த மறுத்துள்ளது.