கடந்த சில மாதங்களாக இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலைக்கு அடிப்படை காரணமானவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மற்றும் கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்வதற்கு சூழ்ச்சிகள் மேற்கொள்வதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய நாமல் குமார விரைவில் கைது செய்யப்படவுள்ளார்.
இந்த கொலை சூழ்ச்சி தொடர்பில் நாமல் குமாரவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விரைவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமல் குமார என்பவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பல சாட்சிகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
நாமல் குமார என்பவர் இராணுவத்தை விட்டு தப்பிச் சென்றவர் எனவும் அவர் தொழிலுக்காக சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானதென தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நாமல் குமார சூழ்ச்சிகளின் பங்காளர் என தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதற்கமைய எதிர்வரும் நாட்களில் நாமல் குமார கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தன்னை கொலை செய்ய சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது என்று குற்றச்சாட்டை முன்வைத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்திருந்தார்.
இந்த அதிரடி மாற்றம் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக நாடு பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்ததுடன், அதுவொரு அரசியல் புரட்சி என வர்ணிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.