கூட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்ணை திருமணம் செய்த இளைஞர்!

இந்தியாவில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்டதோடு, குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தர போராடி வருகிறார்.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஜிதேந்தர் சட்டர். இவர் கடந்த 2015 டிசம்பர் மாதம் இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

அந்த பெண் சில வருடங்களுக்கு முன்னர் எட்டு பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதை தெரிந்து கொண்ட பின்னர் தான் ஜிதேந்தர் அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து பேசிய ஜிதேந்தர், அவளை எட்டு பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்தனர். பின்னர் வீடியோ எடுத்து அவளை மிரட்டி தொடர்ந்து பலாத்காரம் செய்து வந்தனர்.

இதையடுத்து கடந்த 2015-ல் எனக்கும் அப்பெண்ணுக்கும் திருமணம் செய்ய இரு குடும்பத்தினரால் முடிவு செய்யப்பட்டது.

அந்த சமயத்தில் அவள் பலாத்காரம் செய்யப்பட்டது எனக்கு தெரியாது.

நிச்சயத்துக்கும் திருமணத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் அப்பெண் எனக்கு போன் செய்தார்.

நான் அவரை சந்தித்த போது அனைத்து உண்மைகளை சொல்லி, நான் திருமணம் செய்து கொள்ளும் தகுதி இல்லாதவள் என கூறி அழுதாள்.

ஆனால் அந்த நொடியே அவளை தான் திருமணம் செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன். இதற்கு என் பெற்றோரும் ஒப்பு கொண்டனர்.

இதையடுத்து கடந்த 2015 டிசம்பரில் எங்கள் திருமணம் நடைபெற்றது.

இதன்பின்னர் என் மனைவியை பலாத்காரம் செய்தவர்களுக்கு தண்டனை பெற்று தருவதற்கான சட்ட போராட்டத்தை தொடங்கிவிட்டேன்.

இதற்காக என் வீடுகளை விற்று ரூ 14 லட்சம் வரை செலவு செய்துள்ளேன்.

எப்படியாவது அவர்களுக்கு தண்டனை வாங்கிதர வேண்டும் என்பதே என் லட்சியம், அந்த குற்றவாளிகள் பணக்காரர்கள் என்பதால் எனக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன.

எங்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. நானும் என் மனைவியும் சட்டப்படிப்பு படித்து வருகிறோம். பிற்காலத்தில் குற்றங்களை எதிர்த்து போராட மக்களை தயார்ப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் எண்ணம் என கூறியுள்ளார்.