ரோஹித் ஷர்மா படைத்த மோசமான சாதனை!

அவுஸ்திரேலிய மண்ணில் அதிக முறை சதம் அடித்து, போட்டியை வெல்ல முடியாத வீரர்கள் பட்டியலில் ரோஹித் ஷர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

சிட்னியில் நேற்று முன்தினம் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

அவுஸ்திரேலியா நிர்ணயித்த 289 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 254 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 129 பந்துகளில் 133 ஓட்டங்கள் எடுத்தார்.

இதில் 6 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம் மோசமான சாதனை ஒன்றை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். அதாவது அவுஸ்திரேலிய மண்ணில் அவர் அடித்த 4வது சதம் இதுவாகும்.

இதற்கு முன்பாகவே அவர் சதம் விளாசிய போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. இதன்மூலம் அவுஸ்திரேலிய மண்ணில் அதிக சதம் அடித்தும், அணியை வெற்றி பெற வைக்க முடியாத வீரர்கள் பட்டியலில் ரோஹித் ஷர்மா முதல் இடம் பிடித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மெல்போர்ன் போட்டியில் 138 ஓட்டங்களும், 2016ஆம் ஆண்டு பெர்த்தில் 171 ஓட்டங்களும், அதே ஆண்டு பிரிஸ்பேனில் 124 ஓட்டங்களும் ரோஹித் ஷர்மா எடுத்தார்.

இதற்கு முன்பு இந்த மோசமான சாதனை பட்டியலில், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.