தொடக்கக் கல்லூரி மாணவிகளைக் குறிவைக்கும் ஆபாச இன்ஸ்டகிராம் பக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
‘எஸ்ஜிஜேசிபேப்ஸ்’ என்ற அந்தப் பக்கம் கடந்தாண்டு உருவாக்கப்பட்டது. பள்ளிச் சீருடையில் இருக்கும் மாணவிகளின் படங்கள் அதில் பதிவேற்றப்பட்டுள்ளன. இந்தப் பக்கத்தைப் பின்தொடர்வோர் ஆபாச வாசகங்களைப் பதிவு செய்துவருவதாக ‘தி நியூ பேப்பர்’ இதழ் தெரிவித்தது.
தொடக்கக் கல்லூரி மாணவர், மாணவியர் வழக்கமாக 16 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அவர்களின் பாதுகாப்பை அதிமுக்கியமாகக் கருதுவதாக கல்வியமைச்சின் பேச்சாளர் தெரிவித்தார். “இந்த இன்ஸ்டகிராம் பக்கத்தைப் பற்றி கல்வியமைச்சு அறிந்துள்ளது. இது குறித்த எங்கள் கவலைகளை ஃபேஸ்புக்கிற்குத் தெரிவித்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.
நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்து இத்தகைய தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கல்வி அமைச்சு கூறியது.