அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள குட்டித் தீவு ஒன்றில் காப்பாளராக பணியாற்றும் நபருக்கு 130,000 டொலர் ஊதியமாக அறிவித்துள்ளனர்.
சான் பிரான்சிஸ்கோ நகரில் அமைந்துள்ள குட்டித் தீவு ஒன்றில் 145 ஆண்டுகள் பழமையான கலங்கரை விளக்கம் ஒன்றும் அதனுடன் இணைந்து ஹொட்டல் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
இங்கு தினசரி சுற்றுலா பயணிகள் பலர் வந்து செல்கின்றனர். குறித்த தீவில் வேறு குடியிருப்புகள் ஏதும் இல்லை என்பதால் இருவர் மட்டுமே இங்கு காப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
தற்போது சே ரோட்ஜர்ஸ் மற்றும் ஜில்லியன் மீக்கர் ஆகிய இருவரும் இங்கு காப்பாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.
மேலும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் இருவரும் வேறு பணி தேடிச் செல்வதால் புதிய காப்பாளர்களை நிர்வாகம் தேடி வருகிறது.
இங்கு பணியாற்ற செல்பவர்கள் கண்டிப்பாக தம்பதிகளாக இருக்க வேண்டும் எனவும் படகு செலுத்தும் உரிமம் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனையாக கூறப்படுகிறது.
புதிதாக பணி நியமனம் செய்யும் காப்பாளர்கள் இருவரும் கலங்கரை விளக்கத்திற்கு மட்டுமல்ல அங்குள்ள 5 படுக்கையறை கொண்ட ஹொட்டலுக்கும் பொறுப்பாளராக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
விருந்தினர்களுக்கு உணவு வழங்க வேண்டும், அறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், சுற்றுலா பயணிகளை கவனிக்க வேண்டும்.
மட்டுமின்றி இரு வார காலம் புதிதாக பணியில் சேரும் தம்பதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும் இவர்களுக்கு ஆண்டுக்கு 130,000 டொலர் ஊதியமாக வழங்கப்படும் எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.
குறித்த தீவில் இணையதள வசதி மற்றும் தொலைக்காட்சி வசதி ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.