கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் 10 முதல் 50 வயதிற்குட்பட்ட அனைத்து வயது பெண்களுக்கு செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து பெண்கள் பலரும் கோவிலுக்குள் செல்ல முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் இதற்கு பல இந்து அமைப்புகளும், கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் பெண்களை தடுத்து ஐயப்ப பக்தர்கள் பலரும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெண்கள் யாரும் சாமி தரிசனம் செய்யாமல் திரும்பி சென்றனர்.
நிலைமை இப்படி இருக்க, 50 வயதுக்கு கீழ் உள்ள இரு பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில்18 படி ஏறாமல் மற்றொரு வாசல் வழியாக சென்று ஐயப்பனை தரிசனம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த வீடியோவும் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது.
இந்நிலையில், அந்த இரண்டு பேரில் ஒருவரான கனகதுர்காவின் மாமியார் இந்து குறித்து அவரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கு இடையிலும் கைகலப்பு ஆகி, ஒருவருக்கு ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்த கனகதுர்க்கா அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கனகதுர்க்காவின் கணவர், தனது மனைவியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.