சுவிட்சர்லாந்தில் உணவக உரிமையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை விதிப்பு!

சுவிட்சர்லாந்தில் உணவக உரிமையாளர் ஒருவர் தமது பெண் பணியாளர்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் St. Gallen மண்டலத்தில் செயல்பட்டுவரும் பிரபல உணவக உரிமையாளரே பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்கி தண்டனை பெற்றுள்ளார்.

68 வயது கிரேக்க நாட்டவரான இவர் கிழக்கு ஐரோப்பா நாடுகளில் இருந்து இளம் பெண்களை வரவழைத்து தமது உணவகத்தில் பணிக்கு அமர்த்தியுள்ளார்.

மிகவும் குறைந்த ஊதியம் பெற்றுக்கொண்டும் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமலும் இவர்கள் அந்த உணவகத்தில் பணியாற்றி வந்துள்ளனர்.

2013 முதல் 2017 வரை நடந்த இச்சம்பவத்தில் குறித்த உணவகத்தில் பணியாற்றும் பெண்களிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளார் அந்த உணவக உரிமையாளர்.

மட்டுமின்றி தேவையின்றி மிரட்டுவதும் ஊதியத்தை தர மறுப்பதுமாக உளவியல் சித்திரவதைக்கும் உள்ளாக்கி வந்துள்ளார்.

மேலும் செர்பியா மற்றும் மாசிடோனியா நாட்டு இரு பெண்கள் தங்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், இது தங்களின் விருப்பத்திற்கு மாறாக நடந்தது எனவும் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த நபர் தொடர்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசாரிடம் தம் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பெண்கள் நீதிமன்றத்தில் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், குறித்த உணவகத்தில் பணியாற்றியது தங்களின் வாழ்க்கையின் இருண்ட காலம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பெரும்பாலும் இரவு பகல் என இருவேளையும் தங்களை பணிக்கு நிர்பந்தித்ததாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த கிரேக்க நாட்டவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து St. Gallen மண்டல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.