முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளமையால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குள் பல்வேறு முரண்பாடுகள் வெடித்துள்ளன. இந்நிலையில் சுதந்திர கட்சியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் தீவிர முயற்சியில் சந்திரிக்கா ஈடுபட்டு வருகின்றார். எனினும் கோத்தபாயவின் அறிவிப்பை அடுத்து அந்தத் திட்டத்தை கைவிட்டுள்ளதாக தெரிய வருகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கோத்தபாய போட்டியிட்டால், தனக்கான அரசியல் பலம் இல்லாமல் போய் விடும் என சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக சுதந்திர கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதை அவர் கைவிட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலப்படுத்தி வலுவான அரசியல் பயணத்தை மேற்கொள்ள சந்திரிக்கா திட்டமிட்டிருந்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் பொதுஜன பெரமுனவுடன் இணையாமல் இருக்க வேண்டும் என்பதே சந்திரிக்கா தலைமையிலான குழுவினரின் நோக்கமாகும்.
இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னாள் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேவின் வீட்டில் இடம்பெற்றது. இது ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.