தோசை விற்று மகனை அரச சேவையில் சேர்த்த விவசாயி….

திருநெல்வேலியிலிருந்து கடையம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு சின்ன கிராமம் AP நாடனூர். ஒவ்வொரு ஊரும் சில சிறப்புகளை கொண்டிருப்பது போல இவ்வூரின் சிறப்பு, 2 ரூபாய்க்கு தோசை விற்கும் ஒரு கடைதான்.

கூடுதலான வேளையில் குறைவான லாபத்தை எதிர்பார்த்து இந்த 2 ரூபாய் தோசை கடையை ஆரம்பித்தவர் காளிமுத்து.விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர் ஆரம்ப காலகட்டத்தில் விவசாயத்தில் ஈடுபட்டவர். ஒரு சமயத்திற்குப் பிறகு, விவசாயத்தில் நஷ்டம் ஏற்படவே, ஏதாவது தொழில் செய்யலாம் என முடிவெடுத்துள்ளார்.

ஆகவே டீக்கடை ஒன்றை ஆரம்பித்து 10 வருடங்களுக்கு மேலாக தொழில் செய்துவந்தார். டீக்கடையின் மூலம் கிடைத்த லாபத்தை கொண்டு தன் ஊரிலேயே ஒரு ஹோட்டல் ஆரம்பிக்க முடிவு செய்து மற்ற ஹோட்டல்களை போல் அல்லாமல் குறைவான லாபத்தை எதிர்பார்த்து 2 ரூபாய்க்கு தோசை, இட்லி ஆகியவற்றை கடந்த 8 வருடங்களுக்கு மேலாக வழங்கி வருகிறார்.

தோசை கடை காளிமுத்து

ஒவ்வொரு நாளும் இவரின் தோசைக் கடை 4 மணிநேரங்களுக்கு அதாவது காலை 6 மணியிலிருந்து 10 மணிவரை மட்டுமே செயல்படுகிறது. இந்த குறைவான நேரத்தில் 500 தோசை, இட்லிகளை குறைவான லாபத்திற்கு விற்றுவிடுகிறார்.

தன்னுடைய தோசை கடையின் மூலமாக பாடசாலை செல்லும் குழந்தைகள், பல்வேறு மக்களுக்கும் குறைவான விலையில் அவர்களின் பசியை நிறைவு செய்வது சந்தோஷம் என்கிறார் காளிமுத்து.

“இந்த கடையின் மூலம் கிடைத்த லாபத்தை கொண்டு என் மகனை படிக்கவைத்து பொலிஸ் வேலைக்கும் அனுப்பி உள்ளேன். என்னுடைய மூன்று மகள்களையும் கல்யாணம் செய்து வைத்துள்ளேன்” என்று கூறி நிறைவான தந்தையாக பெருமைப்படுகிறார்.