திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் பக்கத்து வீட்டு குழந்தைகள் தனது வீட்டின் முன்பாக விளையாடியதால் ஆத்திரமடைந்த கிராம நிர்வாக அலுவலர், அக்குழந்தைகள் மீது அமிலத்தை வீசினார்.இதில் அக்குழந்தைகள் பலத்த காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகன்கள் குமரன் (வயது 11), கார்த்திக் சரவணன் (வயது 2).
இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் சின்னச்சாமி மகன் பரந்தாமன், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், சிறுவன் குமரனும், குழந்தை கார்த்திக் சரவணனும் பரந்தாமன் வீட்டினருகே விளையாடியதாக பரந்தாமன் தனது வீட்டின் மாடியிலிருந்து குழந்தைகள் மீது பாட்டிலில் இருந்து அமிலத்தை வீசியுள்ளார்.
அது, குழந்தைகளின் மீது விழுந்ததில், எரிச்சல் ஏற்பட்டதால் குழந்தைகள் அலறியுள்ளனர்.உடனே, அங்கு ஓடிவந்த குழந்தைகளின் தாயார் இலக்கியா இது குறித்து பரந்தாமனிடம் கேட்டபோது, அப்படித்தான் வீசுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து, குழந்தைகளை பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து இலக்கியா அளித்த புகாரின்பேரில், ஆயக்குடி காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.