இந்தியாவில் இளம்பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் ஆடியோ ஆதாரத்தை வைத்து பொலிசார் கணவரை கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ராஜேந்திரா (27). காவலரான இவருக்கு சக பெண் காவலரான கரனம் குமாரி (22) என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது.
ஆனால் இருவரும் வெவ்வேறு சாதி என்பதால் இவர்கள் காதலுக்கு இரு குடும்பத்திலும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து நான்கு மாதங்களுக்கு முன்னர் ராஜேந்திராவும், குமாரியும் கோவிலில் திருமணம் செய்து கொண்டு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
திருமணத்துக்கு பின்னர் கணவன், மனைவியிடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டது.
ராஜேந்திரா தன்னுடன் அன்பாக இல்லை என்ற மன வருத்தத்தில் இருந்த குமாரி ஒரு முறை தற்கொலைக்கு முயன்று பின்னர் காப்பாற்றப்பட்டார்.
இந்நிலையில் பயிற்சிக்காக ராஜேந்திரா வட நகரான சண்டிகரில் தங்கியிருந்தார்.
நேற்று ராஜேந்திராவுக்கு போன் செய்த குமாரி, தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார்.
ஆனால் இதற்கு எந்த பதிலும் அளிக்காத ராஜேந்திரா போனை கட் செய்துள்ளார்.
இதன் பின்னர் தனது பெற்றோருக்கு போன் செய்த குமாரி கணவர் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி தற்கொலை முடிவை கூறிவிட்டு தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து குமாரி சடலத்தை கைப்பற்றினார்கள்.
பின்னர் குமாரி போனை சோதனை செய்த போது அதில் கணவருடன் அவர் பேசிய ஆடியோ பதிவாகியிருந்தது.
இதை ஆதாரமாக வைத்து பொலிசார் ராஜேந்திராவை கைது செய்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.