ஒடிசாவில் சாதி கொடுமையால், இறந்த தனது அம்மாவின் உடலை, மகன் தனியாளாக சைக்கிளில் கொண்டு சென்று, காட்டுக்குள் அடக்கம் செய்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் கர்பாபகல் கிராமத்தை சேர்ந்தவர் ஜானகி சின்ஹானியா (45). கடந்த சில வருடங்களுக்கு முன் இவரது கணவர் இறந்துவிட்டதால், தனது 17 வயது மகன் சரோஜ் மற்றும் மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் தண்ணீர் எடுக்க சென்ற ஜானகி, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவருக்கு இறுதி சடங்கு செய்ய முயன்ற அவரது மகன் சரோஜ், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் தாழ்ந்த சாதி என்பதால் அவருக்கு உதவ யாரும் முன்வரவில்லை.
ஆனால் மனம் தளராத சரோஜ், தனது அம்மாவின் உடலை சைக்கிளின் பின்னால் வைத்து, பேலன்ஸ் செய்வதற்காக இரண்டு கம்புகளை, சைக்கிளின் இரு பக்கமும் பொருத்தி, அதன்மேல் மரக்கட்டையை வைத்து அம்மாவின் உடலை கிடத்தியுள்ளார். பின், தன் தலையில் ஒரு துண்டை போட்டுக் கொண்டு நான்கைந்து கி.மீ நடந்தே உடலை காட்டுக்குக் கொண்டு சென்றுள்ளார். மேலும் நடந்து செல்லும் வழியில், இது யார் என்று கேட்டவர்களுக்கு, குரல் உடைந்து, ’என் அம்மா’ என்று பரிதாபமாகச் சொல்லிவிட்டு சென்றுள்ளார் சரோஜ்.
பிறகு யார் உதவியும் இன்றி தனியாளாக காட்டுக்குள் தன் தாயை அடக்கம் செய்துவிட்டு வந்துள்ளார். இறந்த தன் அம்மாவை மகன் தனி ஆளாக அடக்கம் செய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.