அதிரடி மாற்றம் காணப்போகும் சென்னை.. இனி ஒரு பயலும் தப்பிக்க முடியாது..!

கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக சென்னை மாநகரம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

காவல்துறை ஆணையராக ஏ.கே.விஸ்வநாதன் பொறுப்பேற்ற பிறகு சென்னை நகரில் பாதுகாப்புநடவடிக்கைகளுக்காக கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை துரிதப்படுத்தினார்.

அதன் பேரில் சென்னை மாநகரம் 100 விழுக்காடு கண்காணிப்பு கேமரா பாதுகாப்பின் கீழ் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது தொடர்பாக அனைத்து காவல்நிலைய ஆய்வாளர்களுக்கும் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்களும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். பல இடங்களில் பொதுமக்களே முன்வந்து தங்கள் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருகிறார்கள்.

முக்கிய சாலைகளில் குறைந்தபட்சம் 50 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கேமரா பொருத்துவது தொடர்பாக அனைத்து போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் தலைமையில் போக்குவரத்தை சீர் செய்யும் இடங்களை சுற்றியுள்ள வணிக வளாகங்கள், அங்காடிகள், மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் பயனாக சென்னை மாநகரில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகள் பாதுகாப்பின் கீழ்கொண்டு வரப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு வரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சில தினங்களுக்குமுன்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இந்த கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டிச் செல்பவர்களும் சிக்குகிறார்கள். போக்குவரத்து விதிமுறையை மீறும் வாகனங்களின் எண்களை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்காணித்து அவர்களின் முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பி அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தாசப்பிரகாஷ் சிக்னல் அருகே சில தினங்களுக்கு முன்பு ஒரு கொலை நடந்தது. அந்த கொலை பற்றி துப்பு துலக்குவதற்காக ஆய்வு செய்த போது வடமாநில வாலிபரை சிலர் தாக்கும் காட்சி பதிவாகி இருந்தது.

அதன் மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதுபோல பல்வேறு குற்றச் செயல்களில் துப்பு துலக்குவதற்கு கேமராக்கள் உதவியாக உள்ளன.

சென்னை நகரம் முழுவதும் இதுவரை 2 லட்சம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்மூலம் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மவுண்ட்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் குமணன் சாவடிசந்திப்பில் இருந்து கத்திப்பரா மேம்பாலம் வரை 12.8 கிலோமீட்டர் தொலைவுக்கு புதனன்று 443 கண்காணிப்பு கேமராக்கள்பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.