தேனியில் அதிமுக சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவின் போது அக்கட்சியினர் பட்டாசு வெடித்ததில் சாலையில் சென்று கொண்டிருந்த சுமைப்பணி தொழிலாளியின் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது .
தேனி, நேருசிலை நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பு போக்குவரத்து சிக்னல் அருகே அதிமுக சார்பில் தேனி நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நடைபெற்றது. தேனி மக்களவை உறுப்பினர் ரா.பார்த்திபன் முன்னிலை வகித்தார்.
இவ்விழாவில் பங்கேற்க வந்திருந்த அதிமுக மாவட்டச் செயலாளர் எம்.பி.சையதுகானை வரவேற்பதற்கு அக்கட்சியினர் சாலையில் பட்டாசு வெடித்தனர்.
அப்போது அவ்வழியாக அரண்மனைப்புதூரைச் சேர்ந்த சுமைத் தூக்கும் தொழிலாளி முத்துராஜ் (60) என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
பட்டாசு தீப்பொறி இரு சக்கர வாகனம் மீது தெறித்து விழுந்ததில், வாகனத்தின் முன்பகுதி தீப்பற்றி எரியத் தொடங்கியது. அப்போது, முத்துராஜ் இரு சக்கர வாகனத்தை சாலையில் விட்டு விட்டு தப்பினார். அங்கிருந்த தேனி காவல்துறையினர் தீயை அணைத்து, சேதமடைந்த இருசக்கர வாகனத்தை மீட்டனர்.