க.பொ.த சாதாரண தரத்தில் உள்ள 10 பாடங்களை 6 பாடங்களாக குறைக்க யோசனை செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டுக்காக முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தேசிய நிகழ்வு நேற்று கிரிஉல்ல கனேகொட ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது.இந்த நிகழ்வு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் மற்றும் புத்த சாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தலைமையில் நடைபெற்றது.கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உரையாற்றும் போது;
‘சிறார்கள் அம்பு போன்றவர்களாகும். சிறார்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களே சரியாக இலக்கை நோக்கி வழிநடத்த வேண்டும். நாட்டின் எதிர்காலம் கல்வியிலேயே தங்கியுள்ளது.சுதந்திர பிரஜையொருவரை உருவாக்கும் திட்டத்துக்கு தற்போதைய அரசாங்கம் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது.
இதனை அடிப்படையாக கொண்டு கல்வி அமைச்சினால் அருகாமை பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டம், மாணவ ஆலோசனை செயற்பாடுகள், ஆசிரிய பயிற்சி வேலைத்திட்டம் மற்றும் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கல்வி துறையை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டம் உட்பட பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.சிறு பாராயத்தின் இன்பங்களை கூட இல்லாமல் செய்து தற்போது பெரும்பாலான மாணவர்கள் பரிசோதனை கூடத்தின் ரோபோக்களாக மாற்றப்பட்டுள்ளனர்.
ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை போன்று கடும் போட்டியுடன் கூடிய பரீட்சையினால் மாணவர்களுக்கு கடும் அழுத்தங்கள் ஏற்படுகின்றன.இதன்பிரகாரம் மாணவர்களுக்கு ஏற்படும் எல்லைமீறிய அழுத்தங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையை மீளமைப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளேன்.
அத்துடன் க.பொ.த (சாதாரண தர) மற்றும் (உயர்தர) பரீட்சைகளின் போதும் மாணவர்களுக்கு ஏற்படும் அவசியமற்ற அழுத்தங்களை குறைத்து அனைத்து பரீட்சை வினாத்தாள்களையும் பாடபரப்புக்கு உட்பட்ட வகையில் தயாரிப்பது தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ளேன்.இதன்படி க.பொ.த சாதாரண தரப் பாடங்களை 6ஆக குறைப்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது’ என அவர் தெரிவித்துள்ளார்.