இளவரசரின் இரத்தம் என் கைகளில்! மகாராணியாரின் கணவரை மீட்டவர் பேட்டி…

பிரித்தானிய இளவரசரும் மகாராணியாரின் கணவருமான பிலிப் விபத்துக்குள்ளான சம்பவத்தில், சம்பவத்தை நேரில் கண்டவரும், உதவி செய்ய முதலில் விரைந்தவருமான முதியவர் ஒருவர் கொடுத்த பேட்டி மனதை உருகச் செய்கிறது.

பிரித்தானிய இளவரசர் பிலிப், தனது காரை ஓட்டிச் செல்லும்போது ஒரு பெண் ஓட்டி வந்த காருடன் அவரது கார் மோதி விபத்து ஏற்பட்டது.

கார்கள் மோதிக்கொண்டதில் இளவரசரின் கார் ஒருபக்கமாக சரிந்தது. அப்போது அவ்வழியே தனது மனைவியுடன் காரில் வந்த Roy Warne (75) என்னும் முதியவர் உடனடியாக காரிலிருந்து இறங்கி இளவரசரை காப்பாற்ற விரைந்தார்.

 

Royம் அவரது மனைவி Victoria (72)ம்தான் முதலில் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்தவர்கள்.

Roy சரிந்து கிடந்த காரின் கண்ணாடி வழியாக இளவரசரை பார்க்க, சுய நினைவுடன் இருந்தாலும் மிகவும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் அவர் இருந்திருக்கிறார்.

காருக்குள்ளிருந்து இளவரசரை Roy இழுத்தெடுக்க, அவர், என் கால்கள், என் கால்களை எங்கே வைப்பது என்று சத்தமிட்டிருக்கிறார்.

சமீபத்தில்தான் இளவரசருக்கு இடுப்பெலும்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Roy இளவரசரை இழுத்து காரிலிருந்து வெளியே எடுக்க, தனது கைகளில் இளவரசரின் இரத்தத்தைக் கண்டதும், அவரது மனம் நொறுங்கிப் போனதாம், என்றாலும் நல்ல வேளையாக அதிகம் இரத்தம் வெளியேறாததால் தான் மனதை தேற்றிக் கொண்டதாக தெரிவிக்கிறார் அவர்.

இளவரசரை மீட்டபின், விபத்துக்குள்ளான மற்ற கார் மீது தன் கவனத்தை செலுத்திய Roy, அதிலிருந்து புகை வரவே, அது ஒரு வேளை வெடித்து விடலாம் என எண்ணி அதிலிருந்தவர்களை மீட்க சென்றிருக்கிறார்.

அப்போது, அந்த காரின் பின் சீட்டில் ஒரு குழந்தை வீறிட்டு அழுது கொண்டிருந்ததைக் கண்டதாக தெரிவிக்கிறார் Roy.

பின்னர் ஐந்து பொலிஸ் கார்களும் இரண்டு ஆம்புலன்ஸ்களும் வந்து, விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விபத்தில் சிக்கிய மற்ற காரிலிருந்த இரண்டு பெண்களுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இளவரசருக்கும் அவரது பாதுகாவலருக்கும் மட்டுமின்றி அந்த இரண்டாவது காரிலிருந்த குழந்தைக்கும் எந்த காயங்களும் ஏற்படவில்லை.