லைக்கா நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகும் ‘இந்தியன்-2’ திரைப்படத்தின் முதல் படப்பிடிப்பு, சென்னையில் பூஜையுடன் இன்று காலை தொடங்கியது.
1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்து, ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் வசூலை அள்ளி சாதித்தது.
இதையடுத்து, ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என கமல் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்குள் அரசியலுக்கு கமல் வந்து விட்டார். இதனால் இந்தியன் தொடர்ச்சி கேள்விக்குறியாக இருந்தது.
இந்நிலையில், ‘இந்தியன்’ படத்தின் 2வது பாகத்தை 22 ஆண்டுகளுக்குப் பின்னர் ஷங்கர் இப்போது இயக்குகிறார். லைக்கா நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகும் ‘இந்தியன்-2’ திரைப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடி காஜல் அகர்வால்.
இந்தியன்-2’ படத்துக்காக பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், சென்னையில் இன்று காலை (18ம் தேதி) பூஜையுடன் படத்தின் முதல் படப்பிடிப்பு தொடங்கியது. அப்போது, லைக்கா நிறுவனத்தின் நிறுவனர் அல்லிராஜா சுபாஸ்கரன், நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால் மற்றும் படக்குழுவினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்தியன் 2 ஆரம்பம், கமல் ரசிகர்களை மகிழ வைத்துள்ளது.
அரசியல் அவதாரம் எடுத்துள்ள கமல், இந்தியன் 2ல் அரசியல் பன்ச் செய்வார் என்று அவர் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அவர்கள் விருப்பம் பூர்த்தியாகும் வகையில் சில முக்கிய காட்சிகள் இந்தியன் 2ல் இடம் பெறும் என்கிறது கமல் வட்டாரம்.