கமுதி அருகே திருட்டுக்காதலனுடன் சென்ற மனைவியை, இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த கணவரை, அபிராமம் போலீசார் கைது செய்தனர்.
அரியலுார் மாவட்டம் தொட்டறையை சேர்ந்தவர் லதா (38). இவருக்கும் உத்தரகோசமங்கை அருகே மரியாபுரத்தை சேர்ந்த மோசஸ் (37) என்பவருக்கும், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில், தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே, அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், லதாவுக்கு வேலுார் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவடன் திருட்டு உறவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2018 மே மாதம் தனது கணவரை விட்டு பிரிந்த லதா திருட்டுகாதலனுடன் ஊரை விட்டு சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியான மோசஸ், தனது மனைவி லதாவை காணவில்லை என கடந்த 2018, மே 6 ல், அபிராமம் போலீசில் புகார் கொடுத்தார். இந்நிலையில் லதா, அபிராமத்தில் வசிக்கும்போது, பாஸ்போர்ட்டுக்காக விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது அதற்கான விசாரனைக்காக, அபிராமம் போலீசார் தன்னை அழைப்பதாகவும், அதனால் தான் திரும்ப ஊருக்கு வருவதாகவும்தனது கணவர் மோசசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து திருட்டுக்காதலனுடன் மாயமான தனது மனைவி, ஊருக்கு திரும்பி வரும் நிலையில், அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் கணவர் மோசஸ். இதனை தொடர்ந்து லதா நேற்று ஊருக்கு வந்த நிலையில், அபிராமம் அருகே அகத்தாரிருப்பு விலக்கு ரோட்டில், லதா வந்தவுடன் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால், அவரை சராமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த லதா சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து லதாவின் உறவினர் பிரகாஷ் கொடுத்த புகாரின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அபிராமம் போலீசார் லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்த அபிராமம் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி லாதாவின் கணவர் மோசஸை கைது செய்தனர். தற்போது லதாவின் உடல் பிரேத பாரிசோதனை முடிந்து உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.