சென்னையில் மொத்தம் 16 லட்சத்து 82 ஆயிரத்து 91 வீடுகள் உள்ளன. திருவிக நகர் மண்டலத்தில் அதிகபட்சமாக 2 லட்சத்து 79 ஆயிரத்து 569 வீடுகளும், மணலி மண்டலத்தில் குறைந்தபட்சமாக 23 ஆயிரத்து 178 வீடுகளும் உள்ளன.
சென்னை போன்ற பெரு நகரத்தில் வாடகைக்கு வீடு தேடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. மேலும் வீடு வாடகைக்கு உள்ளது என்று தெரியும்படியான ‘TO LET’ போர்டுகளைப் பார்க்கவே முடியாது. அந்தளவுக்கு வீடு வாடகைக்குப் பிடிப்பதில் பல இடையீடுகள் இருக்கின்றன.
சென்னையில் வீட்டு வாடகை இத்தனை மடங்கு கிடுகிடுவென உயர்ந்ததற்கு இந்த இடையீடுகள் ஒரு முக்கியக் காரணம் எனலாம். வேளச்சேரியில் ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு 2 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு படுக்கையறை வசதி கொண்ட வீடு எளிதாகக் கிடைக்கும்.
இன்றைக்கு அது ஐந்து மடங்கு உயர்ந்திருக்கிறது. இந்த வாடகை கமிசன் மட்டும் இந்தியாவின் 20 நகரங்களில் 400 கோடியாக இருக்கிறது. இது இன்னும் ஐந்தாண்டுகளில் 1200 கோடியாக உயர வாய்ப்புள்ளது.
அதேபோல் புறநகர் பகுதிகளிலும் வீட்டின் வாடகை கணிசமாக உயர்ந்தே காணப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த வாடகை வீட்டில் வசிக்கும் மக்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 15 முதல் 20 சதவீதம் வாடகை உயர்ந்துள்ளது.
எங்களின் மாத வருமானத்தில் 25 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை வீட்டின் வாடகைக்கே செலவிடும் நிலை உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வரும் மக்கள், வீட்டு வாடகை அதிகரிப்பால் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.