கொல்கத்தாவில் பாஜகவுக்கு எதிராக, மம்தா பானர்ஜி தலைமையில் மாநில எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலினுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார்.
இக்கூட்டத்தில் ஸ்டாலின், தேவகவுடா, குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
முதலில் வங்க மொழியில் பேசத்தொடங்கிய ஸ்டாலின் வங்க தேசத்திற்கும், தமிழகத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை நினைவுக் கூர்ந்தார். பின்னர் தமிழில் பேசிய ஸ்டாலின் மத்திய பா.ஜ.க.வை கடுமையாக தாக்கி பேசினார்.
மேற்கு வங்கத்திற்கும், தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டத்திற்காக இரும்பு பெண்மணி மம்தாவின் அழைப்பை ஏற்று வந்துள்ளேன்.
கட்சிகள் வேறுவேறாக இருந்தாலும், அனைவரின் எண்ணமும் ஒன்றுதான், அது மோடியை வீழ்த்த வேண்டும் என்பது தான். எதிர்க்கட்சிகளே இல்லை எனக் கூறி வந்த பிரதமர் மோடி தற்போது எதிர்க்கட்சிகளை விமர்சிக்கிறார்.
எந்த கூட்டமாக இருந்தாலும் எதிர்க்கட்சிகள் குறித்தே பிரதமர் மோடி பேசுகிறார், எதிர்க்கட்சிகளை நினைத்து பிரதமருக்கு அச்சம். வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை மீட்போம் என்ற வாக்குறுதியை பிரதமர் மோடி இன்னும் நிறைவேற்றவில்லை.
பாஜக ஆட்சி கார்பரேட் நிறுவனங்களுக்கான ஆட்சி, மத்திய அரசை தனியார் நிறுவனம் போல் மாற்றிவிட்டார் பிரதமர் மோடி என்று கூறினார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி உருக்குலைந்து போகும், ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன், நீங்களா, நாங்களா என ஒரு கை பார்த்துவிடுவோம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.