அமைச்சர் விஜயபாஸ்கரின் தலை தப்பியதா..?

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான ஹெல்மெட் வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் சுகாதாரத்துறை சார்பில் கடந்த ஆண்டுநல வாழ்வு முகாம் நடந்தது. அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் இருசக்கர வாகனங்களில் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இதில் பங்கேற்று இருசக்கர வாகனம் ஓட்டிய சுகாதாரத்துறை அமைச்சர்விஜயபாஸ்கர் உள்ளிட்ட 100 பேர் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளனர்.

நீதிமன்ற உத்தரவை மீறி ஹெல்மெட் அணியாமல் சென்ற அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்தவழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு செல்லும்போது அவசரத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாகவும், இனிமேல் இதுபோல் நடக்காது என்றும் உறுதி அளிக்கப்பட்டது.

இந்த பிரமாணப் பத்திரத்தில் அமைச்சர் அளித்த விளக்கம் மற்றும் உறுதிமொழியை ஏற்ற நீதிபதிகள், அமைச்சருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்தனர்.