மெக்சிகோ நாட்டில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 66 என அதிகரித்துள்ளது.
மெக்சிகோவின் Tlahuelilpan நகரில் அரசுக்கு சொந்தமான பெட்ரோல் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இங்கிருந்து குழாய் மூலம் முக்கிய பகுதிகளுக்கு பெட்ரோல் எடுத்துச் செல்லப்படுகிறது. இவ்வாறான குழாய்களில் இருந்து சட்டவிரோதமாக பெட்ரோல் திருடும் கும்பல் மெக்சிகோவில் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன.
சம்பவத்தன்று கொள்ளை கும்பல் பெட்ரோல் மோசடியில் ஈடுபட்ட நிலையில் அந்த குழாய்களில் ஒன்றில் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஹிடால்கோ மாநிலத்தில் குழாயில் கசிந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்தது. அதில் சிக்கி ஏராளமானோர் கருகினர். அவர்களில் 20 பேர் உயிரிழந்தனர். 54 பேர் காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 76 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என ஹிடால்கோ மாநில கவர்னர் ஓமர் பயாத் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோவில் மெக்சிகோ சிட்டி உள்ளிட்ட நகரங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது.
அங்கு மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று வாங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பெட்ரோல் திருட்டு இங்கு அதிக அளவில் நடைபெறுகிறது.
மட்டுமின்றி 2018 ஆம் ஆண்டு முதல் 10 மாதங்களில் மட்டும் பெட்ரோல் திருட்டு கும்பலால் 12,581 முறை குழாய்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்ட தீ விபத்தால் சுமார் 10 கி.மீற்றர் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 5,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.