கர்நாடக சிறையில்,சசிகலா, இளவரசிக்கு சிறப்பு சலுகைகள்! ஒட்டுமொத்தமாக அம்பலமானது!!

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சசிகலாவும், இளவரசியும் சிறை அறையில் இருந்து ஷாப்பிங் சென்றது தொடர்பான கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகின. இது குறித்து சிறை நிர்வாகம் தெரிவிக்கையில்,சசிகலாவும் இளவரசியும் ஷாப்பிங் செய்வதற்காகக் வெளியே செல்லவில்லை. சிறைக்கு வந்த விருந்தினர்களை சந்திக்கவே சசிகலாவும் இளவரசியும் சென்றதாக விளக்கம் கூறப்பட்டது.

இதையடுத்து, சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக சிறைத்துறை டிஐஜியான ரூபா, டிஜிபிக்கு அறிக்கை அனுப்பினார். இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.

இதைதொடர்ந்து, இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஆட்சியர் வினய்குமார் தலைமையில் குழுவை கர்நாடக அரசு நியமித்து.

இந்நிலையில், சசிகலாவிற்கு சிறப்பு சலுகை அளித்தது உண்மை என்பது வினய்குமார் தலைமையிலான அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு விதிகளை மீறி 5 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சசிகலா சிறையில் சமைத்து சாப்பிட அனுமதிக்கப்பட்டதற்கான ஆதாரங்களும் உள்ளன. சசிகலா சமைப்பதற்காக பிரஷர் குக்கர், மஞ்சள்தூள் உள்ளிட்ட பொருட்களும் இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆடை மற்றும் பார்வையாளர் சந்திக்கும் விவகாரத்திலும் விதிகள் மீறப்பட்டுள்ளன. டிஐஜி ரூபாவின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு சிறை அறையிலும் 4 கைதிகள் இருக்கக் கூடிய நிலையில் சசிகலா, இளவரசிக்கு மட்டும் 5 தனி அறைகள் ஒதுக்கப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.