மீசை போலீசாருக்கு கூடுதல் சம்பளம்….

போலீசாரின் மீசை பராமரிப்பு படியை 50 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக உயர்த்த, உத்தரப் பிரதேச அரசுக்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.

ஆண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை தருவது மீசைதான். முன்பெல்லாம், போலீஸ் என்றால் பெரிய மீசை வைத்திருப்பார்கள். முறுக்கு மீசை வைத்திருப்பவர்கள் தனி மிடுக்குடன் காட்சியளிப்பார்கள். நாளடைவில், பெரிய மீசை வளர்க்கும் ஆசையை ஆண்கள் தவிர்த்து விட்டனர்.

இந்நிலையில், மீண்டும் முன்பு இருந்தது போல போலீசார் மீசை வளர்க்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் வகையில், உத்தரப் பிரதேச காவல்துறை அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஏடிஜிபி பினோத்குமார் சிங் கூறியதாவது:

போலீசாருக்கு கம்பீரத்தை தருவது மீசை. அதன் மூலம், அவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். நான்  பிரயாக்ராஜ் சென்றிருந்தபோது சில நடுத்தர வயது போலீஸ் அதிகாரிகளைச் சந்தித்தேன். அவர்களின் மீசை என்னை வியப்படையச் செய்தது. 2006 – 2007ம் ஆண்டில் 35வது படைப்பிரிவில் நான் இருந்தபோது, மீசை வைத்தவர்களுக்கு சன்மானம் வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தேன்.

இப்போது, பெரிய மீசை வளர்க்கும் போலீசாருக்கு, ‘மீசை பராமரிப்பு படி’யாக மாதம் 50 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதை, 250 ரூபாயாக உயர்த்தும்படி அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆனால், படி எவ்வளவு என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அத்துடன், மீசையை கம்பீரமாக வளர்க்க போலீசாருக்கு ஆலோசனை கூறியுள்ளோம்.

மீசை வளர்ப்பதும், வளர்க்காமல் இருப்பதும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால், மீசை ஒருவர் ஆளுமையை அதிகரிக்கும். குறிப்பாக, போலீஸ்காரரின் ஆளுமையை அது அதிகரித்துக் காட்டும். இவ்வாறு தெரிவித்தார்.