அடிதடி மோதல்! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எம்.எல்.ஏ!

நேற்று முன்தினம் இரவு, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராம்நகர் அருகேயுள்ள தனியார் சொகுசு விடுதியில் உள்ள ஒரு அறையில் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், பீமாநாயக், கணேஷ் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களிடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது.

பீமாநாயக், கணேஷ் ஆகியோர் ஆனந்த்சிங்கிடம், “நாங்கள் பா.ஜ.க.வுக்கு செல்ல இருந்த ரகசிய திட்டத்தை நீங்கள் தான் கட்சி தலைவர்களிடம் கூறி இருக்கிறீர்கள்?” என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர்கள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அது முற்றியபோது, ஆனந்த்சிங்கை கணேசும், பீமாநாயக்கும் சேர்ந்து தாக்கி அவர் படுகாயம் அடைந்து, தனியார் மருத்துவமணையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தனியார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வரும் ஆனந்த் சிங்கை அமைச்சர் ஜமீர்அகமதுகான் சந்தித்து நலம் விசாரித்தார். அவர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், “விடுதியில் நண்பர்களுக்குள் சிறிய அளவில் தகராறு நடந்துள்ளது. பெரிய சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. இதை ஊடகங்கள் தான் பெரிது படுத்துகின்றன” என்றார்.

மற்றொரு அமைச்சரான டி.கே.சிவக்குமாரோ, “எம்.எல்.ஏ.க்கள் இடையே மோதல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. ஊடகங்கள் தான் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருகிறது என்று கூறினார்.

இதுகுறித்து பா.ஜ.க மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பா பெங்களூருவில் செய்தியாளர் இடம் கூறுகையில், “காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சண்டை போட்டுக்கொண்டுள்ளனர். ஒரு எம்.எல்.ஏ. தாக்கப்பட்டுள்ளார். இது எம்.எல்.ஏ.க்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து சித்தராமையா பதில் சொல்ல வேண்டும்” என்று கூறினார்.