இயக்குநர் பாரதிராஜா தனது திரைப்பட கல்லூரி மாணவர் ஒருவரிடம் இருந்து சுமார் 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த இராசரட்ணம் வினோஜ் என்ற இளைஞரே குறித்த திடுக்கிடும் குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைத்தவர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குநர் பாரதிராஜாவின் பிறிக் என்ற கல்லூரியில் சினிமா தொடர்பான பயிற்சிக்காக விண்ணப்பம் செய்திருந்ததாகவும், இந்த நிலையில் இந்தியாவில் தங்கியிருப்பதற்கான வீசா பிரச்சினை ஏற்பட்டது எனவும் வினோஜ் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது அந்த சம்பவத்தை குறிப்பிட்டு இந்திய அரசால் வீசா மறுக்கப்பட்டால் கல்லூரிக்கு செலுத்திய பணத்தினை திரும்பப்பெற முடியுமா என கேட்டதற்கு பாரதிராஜா தரப்பில் உத்தரவாதம் தரப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விசா பிரச்சினை ஏற்பட்டதாகவும் இந்தியாவுக்கு செல்ல முடியாமல் போனதாகவும், அதனால் தமது பணத்தை திரும்பி தருமாறு கேட்டதாகவும் வினோஜ் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் பலமுறை தொடர்பு கொண்டும் உரிய பதிலைத் தர இயக்குநர் பாரதிராஜா தரப்பு மறுத்துள்ளதாகவும்,
இறுதியில் தமக்கு 3 படிவங்கள் அனுப்பிவைக்கப்பட்டதாகவும், அந்த படிவத்தில் இயக்குனா் பாரதிராஜா கையொப்பமிட்டிருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி அந்த படிவங்களில் பாரதிராஜா தமக்கு சேரவேண்டிய 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பியுள்ளதாக குற்ப்பிட்டுள்ளது.
ஆனால் பணம் தமக்கு கிடைக்கவில்லை. இதன் பின்னா் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவா்கள் தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை.
தமக்கு சேரவேண்டிய பணத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுங்கள் என யாழ் ஊடகவியலாளர் சந்திப்பின்போது வினோஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.