இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் கடும் குளிரில் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையானது உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தின் கிராமம் ஒன்றில் கடந்த வெள்ளியன்று நெஞ்சை உலுக்கும் இச்சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தன்று வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது. அப்போது பச்சிளம் குழந்தையின் முனகும் சத்தம் அப்பகுதி மக்களுக்கு கேட்டுள்ளது.
உடனடியாக சத்தம் வந்த திசையில் விரைந்த அப்பகுதி மக்கள் புதைக்கப்பட்டிருந்த குழந்தையை தோண்டி எடுத்து அடுத்துள்ள அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
முதற்கட்ட சிகிச்சைக்கு பின்னர் பிறந்து 3 வாரமேயான அந்த குழந்தை ஆபத்து கட்டத்தை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மேந்திர பிரதான் என்பவர் சுமார் 7 மணி மாலையில் அப்பகுதி வழியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போதே குழந்தை ஒன்று முனகும் சத்தம் கேட்டுள்ளது. துரிதமாக செயல்பட்ட அவர் குழந்தையை தோண்டி எடுத்ததுடன் அப்பகுதி மக்களையும் உஷார் படுத்தியுள்ளனர்.
இந்த கடும் குளிரில் பிறந்து 3 வாரமேயான பச்சிளம் குழந்தையை கைவிடும் கோர முடிவை எப்படி எடுத்தார்கள் என்பது வியப்பாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்த பொலிசார், உடனடியாக அந்த குழந்தையின் பெற்றோரை கைது செய்து விசாரித்துள்ளனர்.
அதில் மந்திரவாதியின் பேச்சை நம்பியே குழந்தையை புதைத்ததாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குழந்தையின் தந்தை மற்றும் உறவினர் பெண் ஒருவரையும் அவரது கணவரான மந்திரவாதியையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.