தாக்குப்பிடிக்குமா தமிழகம்..?

தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ள நிலையில், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லையென வானிலை மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் பனியின் தாக்கம் குறைந்து மழைக்கான சாத்தியக் கூறு உருவாகியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு அந்தமான் கடல், இந்தியப் பெருங்கடல் பகுதிவரை வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி பரவி உள்ளது.

இதன் காரணமாக இந்தியப் பெருங்கடல் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகிறது. அது மேற்கு நோக்கி நகர்ந்து வலுப்பெறும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்டவானிலையே நீடிக்கும். கடலோரப் பகுதி தவிர உள்மாவட்டங்களில் மூடுபனி நிலவும்.

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், வளிமண்டலத்தை கடக்கும் மேக கூட்டங்களால், 25ம் தேதி, தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என, கணிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, கொடைக்கானல் மலைப்பகுதியில் உறைபனியும் நிலவும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்.

அடுத்த சில நாட்களுக்கு குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதிகபட்சம் 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.