யாழில் கொள்ளைக் கும்பலால் சிறுமி வல்லுறவு!

வீட்டின் கூரையை பிரித்துக் கொண்டு உள்நுழைந்த கொள்ளையர்கள், வீட்டிலிருந்த பதின்ம வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

வலிகாமம் வடக்கு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இரண்டு நாட்களாகியும் காமுகர்கள் இன்னும் பொலிசாரின் வலையில் சிக்கவில்லை.

வலி வடக்கில் கடந்த சனிக்கிழமை இரவு இரண்டு கொள்ளைச்சம்பவங்கள் நடந்துள்ளன. இரண்டு இடங்களிலும் பொதுமக்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மூவர் கொண்ட குழுவே கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. ஒரே குழுவே கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

ஒரு வீட்டில், கூரையை பிரித்துக் கொண்டு உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த சிறுமி, சிறுமியின் பெரிய தாய், உறவினர் ஆகிய மூன்று பெண்களையும் மிரட்டி கட்டி வைத்தனர். பின்னர் வீட்டை சல்லடையிட்டு 27 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டனர்.

பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறார்கள். இதுவரை கொள்ளையர்கள் அகப்படவில்லை. சிறுமி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த வருடமும் கொள்ளையர்களால் குடும்பப் பெண் ஒருவர் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டிருந்தார். அராலியில் கூரைபிரித்து உள்நுழைந்த திருடர்கள், கணவன், மனைவியை கட்டி வைத்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டனர். பின்னர் மனைவியை வல்லுறவிற்குள்ளாக்கினார்கள். அந்த சம்பவம் தொடர்பாகவும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இதுவரை நகைகளையும், பணத்தையும் கொள்ளையிட்ட கும்பல் இப்ாது பெண்களையும் குறிவைக்க ஆரம்பித்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை கொள்ளையிடப்பட்ட மற்றைய வீட்டிலும், கூரையை பிரித்துக் கொண்டே திருடர்கள் உள்நுழைந்துள்ளனர்.வீட்டிலிருந்த வயோதிபத் தம்பதியை தாக்கிவிட்டு கொள்ளையிட்டனர். 7 ஆயிரம் ரூபா பணம், 7 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டன. கொள்ளையர்களின் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட முதிவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.