சீர்காழி அருகே கொள்ளிடம் பகுதியில் உள்ள பார்த்தீனிய செடிகளை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பார்த்தீனிய செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளன. அரசு அலுவலகங்கள், பொதுஇடங்கள், வயல்கள், ஆறு குளம் மற்றும் வாய்க்கால்கரைகள், சாலையின் ஓரமுள்ள பகுதிகள் உள்ளிட்ட பலஇடங்களிலும் பார்த்தீனிய செடிகள் செழிப்பாக வளர்ந்துள்ளன.
இந்த வகையான செடிகள் நச்சுத்தன்மை உடையது என்றும், இதில் பட்டு வரும் காற்றும் நச்சுத்தன்மையாக மாறும்என்றும் கூறப்படுகிறது.
பார்த்தீனிய செடிகள் மனிதர்களுக்கும், விலங்குகளுக் கும் அதிக பாதிப்பையும், நோய் ஏற்படும் சூழலையும் உருவாக்கும்.
மனிதர்களின் தோலில் பட்டுவிட்டால் தோல் நோய்ஏற்படும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனை உண்ணும் கால்நடைகள் உயிர் இழப்பிற்கும் வாய்ப்புண்டு என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பார்த்தீனிய செடி ஒரு பெரும் விஷச்செடி, அதனை ஒட்டுமொத்தமாக பிடுங்கி எடுத்து எரித்து விட வேண்டும் என்றும் வேளாண் அதிகாரிகள் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
எனவே கொள்ளிடம் பகுதி அனைத்து கிராமங்களில் பார்த்தீனிய செடிகளை அகற்ற தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் அகற்றி அழிக்க ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.