எத்தனை முறை எந்த தெய்வத்தை சுற்றலாம்?

கோவிலில் பிரகாரத்தை சுற்றி வருவதால் முற்பிறவியில் செய்த பாவம் நீங்கும். அப்படி வலம் வரும் போது, நிறைமாத கர்ப்பிணி நடப்பது போல மெதுவாகவும், தெய்வ சிந்தனையுடனும் வலம் வர வேண்டும்.

ஓடுவது, வேகமாக நடப்பது, சப்தம் எழுப்புவது, தேவையற்றதை பேசிக்கொண்டே வருவது ஆகியவை பாவத்தை அதிகமாக்கும்.

விநாயகரை ஒரு முறையும், சூரிய பகவானை இரண்டு முறையும், சிவபெருமானை மூன்று முறையும், விஷணுவை நான்கு முறையும், லட்சுமி தாயாரை ஐந்து முறையும், அரசமரத்தை ஏழு முறையும் சுற்றி வந்து வணங்க வேண்டும்.

நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றினால் நன்மை பயக்கும். தன்னைத் தானே சுற்றிக் கொண்டு வணங்குவதை ஆத்ம பிரதட்சிணம் என்பர். காலையில் சூரிய நமஸ்காரம் செய்யும் போது மட்டும் இதைச் செய்ய வேண்டும்.

மனிதர்களுக்கு ஆயுட்காலம் இருப்பது போல தெய்வங்களுக்கு ஆயுட்காலம் இருக்கிறதா?

ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள மனிதன் உள்ளிட்ட எல்லா உயிர்களுக்கும் ஆயுட்காலம் இருக்கிறது. ஆனால் கடவுள் பிறப்பு இல்லாதவர். பிறக்காதவர்களுக்கு இறப்பு கிடையாது.

திருமால் மனிதனாக வாழ்ந்து காட்டுவதற்காக ராமர், கிருஷணராக அவதரித்தார். குறிப்பிட்ட காலம் பூலோகத்தில் வாழ்ந்து விட்டு வைகுண்டம் சென்றதை புராணங்கள் கூறுகின்றன.