குப்பைத் தொட்டியில் கிடந்த அழகிய இளம் பெண்ணின் கை, கால்கள்….!

சென்னை பெருங்குடியில் மிகப் பெரிய குப்பைக் கிடங்கு உள்ளது. இங்கு சிலர் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிப்பதற்காக, குப்பையைக் கிளறுவது வழக்கம்.

அப்படிக் குப்பையைக் கிளறிக் கொண்டிருந்தவர்கள் கையில், ஒரு வசதியான இளம் பெண்ணின் துண்டு துண்டாக வெட்டப்பட்ட சிவந்த கால்கள் மற்றும் ஒரு கை மட்டும் தனியே கிடந்ததைக் கண்டு அலறினார்கள்.

உடனடியாக, பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தந்தார்கள்.

உடனே அங்கு விரைந்தார்கள் காவல் துறையினர். அந்தக் கால்களையும், கையையும் ஆய்வு செய்தனர். வலது கையில் தங்கச் செயின் மற்றும் 2 பட்டாம் பூச்சிகள், டிராகன் படம் பச்சை குத்தப் பட்டிருந்தது. உடல் பாகங்களைப் பார்த்த போது, 30 வயதிற்குள் உள்ள இளம் பெண் என்பது தெரிந்தது.

அழகிய சிவப்பான கால் விரல்களில் மெட்டி அணிவிக்கப் பட்டிருந்தது. கை தேர்ந்த டாக்டர்கள் அல்லது, கறி வெட்டுபவர்கள் தான், இந்த மாதிரி ஒரு உடலை வெட்ட முடியும், என்று போலீசார் கருத்து கூறினார்கள்.

இந்தக் குப்பை, சென்னை 10-வது மண்டலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. அசோக் நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குப்பையில் தான், இந்த உடல் பாகங்களைப் போட்டிருக்கிறார்கள்.

இந்த கால்கள் மற்றும் கைக்குச் சொந்தமான உடல் மற்றும் தலை எங்கே? யார் இப்படி ஒரு கொலையைச் செய்து, உடலை வெட்டித் துண்டாக்கி குப்பையில் போட்டது? என்று போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.