தற்போது நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பழைய டிரைவிங் லைசன்ஸ்க்கு பதிலாக, புதிய ஸ்மார்ட் லைசன்ஸ் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்த உள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு மாதிரியான ஓட்டுநர் உரிம அடையாள அட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மாற்றவும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓட்டுநர் உரிம அடையாள அட்டையை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, தற்போது உள்ள அனைத்து ஓட்டுநர் உரிம அடையாள அட்டையிலும், அந்த அந்த மாநிலத்தின் பெயர் இடம்பெற்றிருக்கும்.இந்தியாவிற்கான பொதுவான அடையாள அட்டையாக இருக்கும்.
மேலும், அதனை ஒரு ஸ்மார்ட் அட்டையாகவும் கொண்டுவரஉள்ளது. பழைய ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளவர்கள் அதனை கட்டாயம் மாற்றி, புது ஓட்டுநர் உரிமம் பெறவேண்டும் இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை ஓட்டுநர் உரிம அடையாள அட்டை பற்றி நாடு முழுவதும் உள்ள ஆர்டிஓ அதிகாரிகளிடமும் கருத்துக்களைக் கேட்டுள்ளது.
அதன் அடிப்படையிலையே இந்த புதிய ஓட்டுநர் ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளதாகவும், வரும் 2019 ஜூலை மாதம் முதல் இது நாடு முழுவதிலும் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தப் புதிய ஸ்மார்ட் அட்டைகளில் QR குறியீடு முறை பயன்படுத்தப்பட்டிருக்கும்.
தற்போது தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழை ஸ்மார்ட் கார்டுகளாக வழங்கும் திட்டத்தை சென்னை திருவான்மியூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
இந்த வகை ஸ்மார்ட் கார்டுகளை போலியாக தயாரிக்க முடியாது என அதிகாரிகள் கூறியுள்ளனர். கிரெடிட் கார்டுகளுக்கு இணையான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதால் தகவல்களை திருடவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பழைய கார்டு, பழைய ஆர்.சி புக் வைத்திருப்பவர்கள் இனிடிஜிட்டல் முறையிலான ஆவணத்திற்கு மாற வேண்டும். முறையான ஆவணங்களை வழங்கும் பட்சத்தில் ஒரு மணி நேரத்தில் ஸ்மார்ட் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு மாதங்களில் இந்த முறை தமிழகம் முழுவதும் அமலுக்கு வர உள்ளது.