சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளாவில் பல போராட்டங்கள் நடந்தன. அந்த சமயத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய இரண்டு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர்.
அந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த பெண் இருவரையும் வீட்டுக்கு அனுப்பாமல் போலீசார் அவர்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதனையடுத்து, கேரள மாநிலம், மலப்புரத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு கனகதுர்கா சென்ற போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இதனையடுத்து, அவரது மாமியார், கடுமையாக தாக்கியதாகவும், இதனால் தலையில் காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறையினரிடம் கனகதுர்கா புகார் அளித்து மருத்துவமனையில் சேர்ந்தார்.
இதனையடுத்து கனகதுர்கா தனதுதனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் 24 மணி நேர பாதுகாப்பு வேண்டும் என்றும் கூறி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதேபோல் தனது மருமகள் கனகதுர்கா தன்னை தாக்கியதாக மாமியார் புகார் தெரிவித்து, கனகதுர்காவின் மாமியாரும் மருத்துவமனையில் சேர்ந்தார்.
இதனையடுத்து, கனகதுர்கா நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, தனது கணவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு அவரது வீடு பூட்டியிருந்தது. இதையடுத்து கனகதுர்காவின் கணவரை போலீசார் அழைத்து விசாரித்துள்ளனர். அவர் போலீசாரிடம் வீட்டின் சாவி வேறு எங்கேயோ இருப்பதாக கூறியுள்ளார்.
ஆனால் கோயிலுக்குள் நுழைந்து, சடங்குகளை மாற்றிவிட்டதால் கனகதுர்காவை வீட்டை விட்டு விரட்டியடித்துள்ளனர். இதனையடுத்து பெரிந்தலமன்னா பகுதியில் உள்ள அரசு விடுதியில் கனகதுர்கா தஞ்சம் அடைந்துள்ளார்.