ரஷிய விமானத்தை கடத்த முயன்ற நபர்!

ரஷிய விமானத்தை கடத்த முயன்ற குடிகார நபரை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரஷிய விமானம் ஒன்று, சைபீரியாவின் சூர்குத் நகரத்தில் இருந்து மாஸ்கோ நோக்கி நேற்று சென்றுகொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு நபர், விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு திருப்பும்படி விமான ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் விமானி அந்த விமானத்தை அவசரமாக காண்டி மான்சிய்ஸ்க் நகரில் தரையிறக்கினார். அந்த விமான நிலையத்தில் சுமார் ஒரு மணி நேரம் அந்த விமானம் நிறுத்தப்பட்டிருந்தது.

போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. போலீசார் விமானத்தில் ஏறி அந்த நபரை கைது செய்தனர். குடிபோதையில் இருந்த அவர் சூர்குத் நகரை சேர்ந்தவர் என்பதும், சொத்துகளை சேதம் செய்த வழக்கில் தண்டனை அனுபவித்தவர் என்பதும் தெரிந்தது. அவர் மீது விமானத்தை கடத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.