கம்பஹாவில் பாடசாலை மாணவியை தவறான முறையில் வீடியோ எடுத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பூகொட பகுதியில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த மாணவியையே இவ்வாறு வீடியோ எடுத்துள்ளார். எனினும் பேருந்தில் பயணித்த பயணிகளின் ஆதரவுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாடசாலை மாணவி பாடசாலைக்கு செல்வதற்காக ஹங்வெல்லவில் இருந்து கிரிதிவெல வரை பயணித்த தனியார் பேருந்தில் சென்றுள்ளார். அந்த மாணவியுடன் அவரது தந்தையும் பயணித்துள்ளார். அந்த பேருந்து பாடசாலையை நெருங்கிய போது பின் கதவருகிற்கு மாணவி சென்றுள்ளார்
இந்த சந்தர்ப்பத்தில் கதவிற்கு அருகில் அமர்ந்திருந்த நபர் மாணவியின் ஆடைக்கு கீழ் கையடக்க தொலைபேசியை வைத்து காணொளி எடுத்துள்ளார். இதனை அவதானித்த நபர் ஒருவர் மாணவியின் தந்தையிடம் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து பேருந்தில் பயணித்த அனைவரும் ஒன்றிணைந்து, குறித்த நபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைந்துள்ளனர். அவரது கையடக்க தொலைபேசியை சோதனையிட்ட போது பேருந்தில் பயணித்த பலரை தவறாக எடுத்த காணொளிகள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் அவர் தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் செய்பவர் எனவும் குறிப்பிடப்படுகின்றது.