திடீர் திருப்பம்: ஜெயலலிதா மரணத்தில் சிக்கிய முக ஸ்டாலின்.!

ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து 75 நாள்கள் அங்கு சிகிச்சை அளித்தனர். கடைசியில் சிகிச்சை பலனின்றி 5.12.2016 அன்று காலமானர்.

இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் உட்பட பலரும் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக தமிழக அரசால் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகத்தில் செயல்பட்டு வரும் இந்த விசாரணை ஆணையம் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது. இந்த ஆணையத்தில் முன்னாள் தலைமை செயலாளர், உயர் காவல் அதிகாரிகள், அப்போலோ மருத்துவர்கள் உட்பட பலரிடமும் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணை ஆணையம், மறந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் உறவினர்கள், போயஸ் கார்டன் பணியாளர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் என இதுவரை 140-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளது.

பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா தனது தரப்பு வாக்குமூலத்தை அவரின் வழக்கறிஞர் மூலம் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்து இருந்தார். பலதரப்பட்ட விசாரணை மற்றும் குறுக்கு விசாரணைகளுக்கு பின் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓபிஎஸ் அவர்களுடன் விசாரணையை முடித்துக்கொள்ள ஆணையம் முடிவு செய்தது.

இந்நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சசிகலா தரேப்பு வழக்கறிஞர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி ஆகியோரிடமும், ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ”மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து வெளியான சர்ச்சைக்குரிய கருத்துகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க எங்கள் தரப்புக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இதன் காரணமாக சர்ச்சையை கிளப்பிய மு.க.ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி ஆகியோரிடமும் விசாரணை நடத்த எங்கள் தரப்பு உறுதியாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.