கடந்த 21-ம் தேதி ரஷ்யக் கடல் பகுதி எல்லையான கெர்ச் வளைகுடாவில் தான்சானியாவை சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.
நடுக்கடலில் வைத்து ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எரிவாயு மாற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஒரு கப்பலில் திடீரெனத் தீப்பற்றி எரிந்தது. அந்தத் தீ மற்றொரு கப்பலுக்கும் பரவியதில், அதில் இருந்த 16 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
மேலும், பலர் காணாமல் போனதால் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாலுமி ஒருவரும் அடங்குவார்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 24 வயதான செபாஸ்டின் பிரிட்டோ என்பவர்தான் காணாமல் போயுள்ளார். இந்த தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடலில் மாயமான தங்கள் மகனின் நிலைகுறித்து உரிய தகவல்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோரும் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.