ஜேர்மனில் 21 வயதான ஈராக் நாட்டை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர் பல குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல், 14 வயதான சிறுமியை கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு யூலை மாதம் Susanna Maria Feldman என்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் ஜேர்மன் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான Ali Bashar ஈராக் நாட்டிற்கு தப்பியோடிய நிலையில், வழக்குகளை எதிர்கொள்வதற்காக ஈராக் நாட்டில் இருந்து ஜேர்மன் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டார்.
இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்கு ஜேர்மனியில் 11 மற்றும் 14 வயதுடைய இரண்டு பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
ஈராக்கிற்கு திரும்பிச் சென்ற நிலையில், ஜேர்மன் நாட்டு மக்களிடையே கூக்குரல் எழும்பியதையடுத்து, உள்ளூர் குர்திஷ் பாதுகாப்புப் படைகளால் கைது செய்யப்பட்டு, ஜேர்மன் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டார்.
Ali Bashar யின் தம்பியும் ஈராக் நாட்டில் வசித்து வருகிறார். இவருக்கும் 14 வயது சிறுமியின் கொலை வழக்கில் தொடர்பு இருக்கும் என ஜேர்மன் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
2015 ஆம் ஆண்டு Bashar ஜேர்மன் நாட்டிற்கு தனது பெற்றோருடன் மற்றும் ஐந்து உடன்பிறப்புகளுடன் புகலிடம் கோரியுள்ளார்.
புகலிடக்கோரிக்கை நிராகரிப்பட்டதையடுத்து, மேல்முறையீடு நிலுவையில் தற்காலிக குடியிருப்பு அனுமதி பெற்றார். இதற்கிடையில் தான் இந்த சம்பவத்தையடுத்து ஈராக் நாட்டிற்கு திரும்பி சென்றுள்ளார்.
இவர் ஜேர்மனில் தங்கியிருந்த காலகட்டத்தில், கொள்ளை, வன்முறை என பல்வேறு குற்றங்களை செய்துள்ளார். ஜேர்மனை உலுக்கி 14 வயது சிறுமி சூசன்னா வழக்கு காரணமாக புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்படும் திட்டம் விரைவுபடுத்தும்படி அதிபர் ஏஞ்சலாவுக்கு அரசியல் கட்சிகளால் அழுத்தம் அதிகமானது குறிப்பிடத்தக்கது.