பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உடல்- தலையை கண்டுபிடிக்க பொலிஸார் தேடுதல் வேட்டையை மேற்கொண்டு வருகின்றனர்.
நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் எதிரே உள்ள குப்பை சேகரிப்பு நிலையத்திலிருந்து கொட்டப்பட்ட குப்பையிலேயே குறித்த பெண்ணின் கையும், கால்களும் பொதி செய்து வீசப்பட்டிருந்த நிலையில் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பள்ளிக்கரணை பொலிஸார் விரைந்து சென்று கை, கால்களை மீட்டு விசாரணை நடத்தினர்.
துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட இளம் பெண் யார்? என்பதை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் வேட்டை முடுக்கி விடப்பட்டது. கடந்த 5 நாட்களாக சென்னை மாநகர் முழுவதும் பொலிஸார் தலையை தேடிப்பார்த்தனர். குப்பை மேடுகளிலும், புதர் மண்டிய பகுதிகளிலும் தேடினார்கள். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இளம்பெண்ணின் தலையையும் உடலையும் தேடிக்கண்டுபிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சென்னை மாநகர் முழுவதும் மாயமான பெண்களின் பட்டியலை பொலிஸார் சேகரித்தனர். மொத்தம் 60 பேர் காணாமல் போனது தெரிய வந்தது. இவர்கள் அனைவரும் 25 வயதில் இருந்து 40 வயதுக்குட்பட்டவர்கள். காணாமல் போன இந்த பெண்களின் புகைப்படம் மற்றும் தொலைப்பேசியின் இலக்கத்தை வைத்து துப்பு துலக்கப்பட்டு வருகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, இளம்பெண் கொலை வழக்கு சவாலாகவே உள்ளது. 3 தனிப்படையினர் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதில் துப்பு துலங்கும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார். கொலையுண்ட பெண்ணை கண்டுபிடிப்பதற்காக துண்டுபிரசுரங்களை பொலிஸார் அச்சடித்து ஒட்டியுள்ளனர்.