திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிட்டு இருந்த நிலையில், கஜா புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் ஏப்ரல் வரை தேர்தல் வேண்டாம் என தமிழக தலைமை செயலர் டிசம்பர் 3ல் கடிதம் எழுதியதையடுத்து, திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
முன்னதாக, திமுகவுடன் நட்பில் இருக்கும் கட்சியான கம்னியூஸ்ட் கட்சி திருவாரூரில் இடைத்தேர்தல் நடத்த கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்திடமும், உச்சநீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தது. அதேபோல் திமுகவுடன் நட்பில் இருக்கும் கட்சியான விடுதலை சிறுத்தை, மதிமுக, திக கட்சியும் இந்த இடைத்தேர்தலுக்கு சந்தேகத்தை எழுப்பினர். இந்த இடைத்தேர்தல் தள்ளி போனதுக்கு வருத்தப்பட்ட ஒரே கட்சி அமமுக மட்டும் தான்.
இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்த கூறி கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கெஞ்சும் ஆடியோ அரசிடம் உள்ளதாக தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசி இருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
நேற்று திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அதிமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ”தேர்தலை கண்டு பயமில்லை எனப் பேசும் ஸ்டாலின் தான், திருவாரூர் இடைத்தேர்தலை திட்டமிட்டு, இந்த தேர்தலை எப்படியாவது நிறுத்த வேண்டும் என கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் அவர் கெஞ்சிய ஆடியோ அரசால் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். அமைச்சரின் இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.