கேரள மாநிலம் திருச்சூரில் வசித்து வருபவர் இயக்குனர் பிரியாநந்தன். இவர் மலையாளத்தில், நெய்துகரன், புலிஜன்மம், சுஃபி பரஞ்ச கதா, பதிரகாலம் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
இவர் சமீபத்தில்,சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு ஆதரவு தெரிவித்து,நடைபெற்ற ஆர்போ ஆர்தவம அதாவது மாதவிடாய் அசுத்தமல்ல என்ற நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் சபரிமலைக்கு செல்லும் பெண்களை தடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது முகநூல் பக்கத்தில் விமர்சனம் தெரிவித்திருந்தார்.
அதனால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பல அமைப்பினரால் அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தது .மேலும் சில நாட்களுக்கு முன்பு கர்மா சமிதி என்ற அமைப்பினர்,தங்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக கூறி இயக்குனர் பிரியானந்தன் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இந்நிலையில் இன்று காலையில் தனது வீட்டிலிருந்து வெளியே சென்ற இயக்குனர் பிரியாநந்தன் மீது,மர்மகும்பல் ஒன்று கரைத்து வைத்திருந்த மாட்டு சாணத்தை ஊற்றி, அவரை தாக்கிவிட்டு சென்றது.
இதனை தொடர்ந்து ,இயக்குனர் பிரியாநந்தன் இந்து அமைப்புகள்தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளது எனவும் அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என தெரிவித்தார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.