கொள்ளையிட்ட வீட்டில் சிறுமியை சீரழித்த சூத்திரதாரிகள் கைது!

யாழ்ப்பாணத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்ததுடன், வீட்டிலிருந்த சிறுமியை சீரழித்த சம்பவத்தின் சூத்திரதாரிகள் என்ற சந்தேகத்தில் பொலிசார் கைது செய்துள்ளனர். நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருவரையும் விசாரிக்க, மல்லாகம் நீதிவான நீதிமன்று அனுமதியளித்துள்ளது.

தெல்லிப்பழையை சேர்ந்த மகாதேவன் ரூபன் (28), ஏழாலையை சேர்ந்த இராஜகோபால் கிருஷ்ணகுமார் (30) ஆகியோரே, சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகள் என பொலிசார் தெரிவித்தனர். இவர்களை விட, சம்பவத்துடன் தொடர்புடைய இன்னும் இருவரும் கைதாகியுள்ளனர்.

மகாதேவன் ரூபன், இராஜகோபால் கிருஷ்ணகுமார் இருவருமே சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்றும், விசாரணையின்போது, இருவரும் பரஸ்பரம் குற்றம்சுமத்தியபடி உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வலிகாமம் வடக்கில் கடந்த 19ம் திகதி இரண்டு வீடுகளிற்குள் புகுந்து திருடர்கள் நகை, பணம் என்பவற்றை கொள்ளையடித்தனர். ஒரு வீட்டில், சிறுமியை பலாத்காரம் செய்தனர். அவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டார்.

இந்த விடயம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தயதையடுத்து, பொலிசார் துரித விசாரணையில் இறங்கினர்.

இளவாலையை சேர்ந்த இளைஞன் ஒருவனை பொலிசார் கடந்த வியாழக்கிழமை சந்தேகத்தின் பெயரில் கைது செய்தனர். வீடுகளை நோட்டமிட்டு, கொள்ளைக்கும்பலிற்கு தகவல் வழங்குவதை சிசிரிவி கமரா காட்சிகளின் அடிப்படையில் கண்டறிந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

அவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையையடுத்து கட்டுவனை சேர்ந்த மகாதேவன் ரூபன் என்பவனை பொலிசார் கைது செய்தனர். பொலிசார் வீட்டுக்கு வருவதை அறிந்ததும், வீட்டு லெவல் சீற்றுக்குள் அவன் பதுங்கிக் கொண்டான். வீட்டை சுற்றிவளைத்து, அவனை இழுத்து எடுத்து சென்றனர் பொலிசார்.

அவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இராஜகோபால் கிருஷ்ணகுமார் என்பவனை, அவனது வீட்டில் வைத்து பொலிசார் கைது செய்தனர். நகை, பணத்தை கொள்ளையிட்டதை இருவரும் ஏற்றுக்கொண்டனர். அவற்றை நவாலியிலுள்ள பெண் ஒருவரிடம் கொடுத்ததாக வாக்குமூலமளித்தனர். தற்போது அந்த பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

சிறுமியை பலாத்காரம் செய்த விடயத்தில், இருவரும் ஒருவர் மீது மற்றவர் கு்றம்சாட்டி வருகிறார்கள். எனினும், சிறுமியின் வாக்குமூலப்படி, இருவரும் அந்த பாதகச்செயலில் சம்பந்தப்பட்டாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மல்லாகம் மாவட்ட பதில் நீதிவான் முன்னிலையில் இருவரையும் முற்படுத்தியபோது, நாளை வரை அவர்களை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்ப்பட்டுள்ளது.