திருமணம் முடிந்த 3 மாதங்களில் தற்கொலை செய்துகொண்ட தம்பதி!

வேலூர் மாவட்டத்தில் திருமணம் முடிந்த 3 மாதங்களில் புதுமணத்தம்பதியினர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குமாரமங்கலம் அருகே வீராங்குப்பத்தை சேர்ந்த பாபு-கவிதா தம்பதியினரின் மகன் விஜயகுமார் (27).

இவருக்கும் பொத்தரை கிராமத்தை சேர்ந்த பிரியா (21) என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்தத சில நாட்களிலே தம்பதியினர் இருவரும் வீராங்குப்பத்தில் தனியே வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.

கணவன், மனைவி இருவருமே சண்டை போடாமல் கிராமமே வியந்து பார்க்கும் அளவிற்கு வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று முழுவதும் வீடு திறக்கப்படாமல் இருந்துள்ளது. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் திறக்க முற்படும் போது கதவின் உள்பக்கம் தாழ்பாள் போடப்பட்டிருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அங்கு விஜயகுமார் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவருடைய மனைவி பிரியா மயங்கிய நிலையிலும் தரையில் கிடந்தார். அவருக்கு அருகே ஒரு விஷ பாட்டில் கிடந்துள்ளது.

இதனையடுத்து இருவருடைய உடல்களையும் மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருநாள் கூட சண்டை போடாமல் மகிழ்ச்சியாக இருந்த தம்பதி திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.